Skip to main content

Posts

Showing posts from June 27, 2025

பட்டாம்பூச்சிக் கதைகள்

இலையுதிர் கால மரங்களைப்போல் நாட்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும் வாழ்வில், ஞாபகங்களின் வழியே உயிர்த்தெழும் இறந்த கால வாழ்வின் சாட்சியாய் இருப்பது நீ மட்டுமே.. ! மழை பெய்து கொண்டிருக்கும் என் மனதின் தெருக்களில் உன் காலடித் தடங்கள் குளங்களைப் போல் இருக்கின்றது.

பட்டாம்பூச்சிக் கதைகள்

  என் தேவை, என் வாழ்வு என்று எல்லாம் தனியாகிப் போனதில் வருத்தமேதும் இல்லை என்றாலும், சற்றுநேரம் சலனமற்று இருக்கும் போதெல்லாம், உன் நினைவென்னும் குளத்தை சுற்றியே நடந்திருக்கிறேன் ஒரு துறவியைப் போல.  வண்ணத்துபூச்சியின் சிறகைப் போன்றவள் நீ..  நான் பூக்களை திறந்து வைத்திருக்கும் காட்டைப் போன்றவன்.  பறத்தலும் இருத்தலும் உன் விருப்பம் சார்ந்தது.  18:09:2015  பட்டாம்பூச்சிக் கதைகள்

பட்டாம்பூச்சிக் கதைகள்

யாசகப் பாத்திரமாகுமென்  உள்பெட்டி முழுவதும் உருண்டு விழும்  நாணய இசையென ஆறுதலாகுமுன் குறுஞ்செய்திகள் வருமோசை..! 10:05:2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

அது காதல் என்னை பெருங்கருணையோடு ஆசிர்வதித்திருந்த காலம்.  செல்மாகராமியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டு குன்னூர் புனித அந்தோனியார் தேவாலயத்தில், வாழும் ஜிப்ரான் போல் வேண்டிக் கொண்டே இருந்தேன்.  அந்த நாட்களில் தான் நந்தினி மீது விவரிக்கவே இயலாத ஆன்ம நட்பு வளர்ந்திருந்தது. அந்த நாட்களின் அனுபவ குறிப்புகள் தான் பட்டாம்பூச்சிக் கதைகள் ஆனது.  ஜூனியர் விகடனில் "காதல் படிக்கட்டுகள்" தொடராக வெளிவந்த போது எழுத்தின் மீதும் புத்தகங்கள் மீதும் இலக்கியத்தின் மீதும் அளவற்ற காதலுடன் இருந்தேன். இப்போதும் மனதில் சாலமன் பாப்பையாவின் வரிகள் சலசலத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. "பெருமழை பெய்யறப்போ மழைத்தண்ணி ஓஓ ன்னு அடிச்சுப் பொரண்டு பொறப்பட்டு வருமே, வழியில கிடக்குற அத்தனையும் அள்ளிக்கிட்டு உற்சாகமா கலங்கடிச்சுகிட்டு வருமே அது சின்ன வயசுச் சேட்டைக மாதிரி. அதுக்கு நிதானம் தெரியாது.  ஆனா, மழை வடிஞ்ச மறு நாளு அதே ஓடை கண்ணாடியைக் கரைச்சு ஊத்துன மாதிரி மெள்ள சலசலக்கும் பாருங்க அந்த நல்ல தண்ணி நடந்து வர்ற அழகு மாதிரி இருக்கணும்யா வாழ்க்கை!"

பட்டாம்பூச்சிக் கதைகள்

தாய்மையைத் தாண்டியும்  நீ மேலேழுகிறாய்.. ஒவ்வொரு கவிதையிலும்  நான் பிறக்கிறேன்  உன்னிடமிருந்து. யாருக்கு எப்படியோ  எனக்கு நீ தான்  தேவதை. 23 மார்ச் 2016

பட்டாம்பூச்சிக் கதைகள்

  காதலாகி கசிந்துருகி  கடவுள் தேடி அலைந்துருகி  ஜீவானான தீபம் எரிய  திரியெல்லாம் கருக  யாக்கையில் எதுவுமில்லை  என்றறிதல் தெய்வீகம். 22 ஜுலை 2020